Monday 26 August 2013

ஓம் நமோ பகவதே வாசுதேவாய

ஸ்தாபிதம்: சித்திரை பானு வருடம் வைகாசி மாதம் 18-ம் தேதி 01.06.2002 சனிக்கிழமை

நிறுவனத்தலைவர் திரு. இராமசுடலை முத்துப்பிள்ளை B.A.B.T திருவட்டார்


108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றானதும், தென்னிந்தியாவில் வைகுண்டம் என போற்றப்படும் திருவட்டார் அருள்மிகு ஸ்ரீஆதிகேசவபெருமாள் திருத்தலம் நம்மாழ்வாரால் பாடல் பெற்ற திருத்தலம். திருவிதாங்கூர் அரச பரம்பரையினரால் குலதெய்வமாக போற்றப்பட்டு வரப்பட்ட திருக்கோயில். 16008 சாளக்கிராமங்கள் உள்ளடக்கிய கடுசர்க்கரை எனும் கலவையால் உருவாக்கப்பட்ட மூலவர். மேற்கு நோக்கிய திருமுகம், புஜங்கசயனம், வலது கை யோக முத்திரை காட்டியும், இடது கை நீட்டியும், தெற்கே திருமுகமும், வடக்கே திருப்பாதமும், ஸ்ரீஷேசயனமாக மேற்கு நோக்கிய திருக்கோலம் நாபியில் தாமரையோ, பிரம்மாவோ இல்லை.


22 அடி நீளமான திருக்கோலம்
 தாயர்: ஸ்ரீதேவி, பூதேவி
 தீர்த்தம்: கடல்வாய் தீர்த்தம்,வாட்டாறு இராம தீர்த்தம்

 இங்குள்ள அதிசயங்களுள் ஒன்றாக புரட்டாசி மாதம் 3-ம் தேதி முதல் 8-ம் தேதி வரையிலும் பங்குனி மாதம் 5-ம் தேதி முதல் 9-ம் தேதி வரையிலும் அஸ்தமன சூரியனின் செங்கதிர்கள் கற்பகிரகத்தினுள் விழும் விதத்தில் கோவில் அமைப்பு உள்ளது. உத்தராயணம், தட்சிணாயனம் தொடங்குவதின் அடிப்படையில் ஆடிமாத பெருந்தமிர்து பூஜை, தைமாத பெருந்தமிர்து பூஜை நடைபெறுகிறது. தை மாதத்தில் 12 நாட்கள் களப பூஜையும் உண்டு. ஸ்ரீநரசிம்மமூர்த்திக்கு தனி சன்னதி கோவில் கிழக்கு பக்கம், ஸ்ரீகுலசேகரபெருமாள் தனி சன்னதி கோவில் கிழக்கு பக்கம்.
பூஜை விபரங்கள்

                               காலை: 5.00 மணி     –   திருநடை திறப்பு
                               காலை: 6.00 மணி    –    உஷபூஜை
                               பகல்: 11.00 மணி       –   உச்சகால பூஜை
                               பகல்: 12.00 மணி       –   திருநடை சார்த்துதல்
                               மாலை: 5.00 மணி    –   திருநடை திறப்பு
                               மாலை: 6.30 மணி    –   சாயரட்சை
                               மாலை: 8.00 மணி    –   அத்தாழ பூஜை, திருநடை சார்த்துதல்

வழிபாடுகள்

                               பால்பாயசம், அப்பவழிபாடு, பிரசாத ஊட்டு, துலாபாரம்.

தலவரலாறு




திருவட்டார் மிகவும் பழமையும், செழுமையம் வாய்ந்த ஊர். இதன் நிலவளத்ததை “வள நீர் வாட்டாறு” என மாங்குடி கிழார் புறநானுற்று பாடல் (396) ஒன்றிலே குறிப்பிடுகிறார். மேலும் திருவாட்டாற்றைத் தலைநகராகக் கொண்டு எழினியாதன் என்ற வேளிர் தலைவன் இப்பகுதியை ஆண்டு வந்தான் என அப்பாடல் தெரிவிக்கின்றது. இவனும் கடையேழு வள்ளல்களில் ஒருவரான அதியமான் நெடுமான் அஞ்சியும் ஒரே வம்சத்தில் உதித்தவர்கள் என கருத இடமிருக்கிறது. ஒன்பதாம் நூற்றாண்டில் தோன்றிய நம்மாழ்வார் இப்புண்ணியத் தலத்தை வளமிக்க வாட்டாறு என மங்களாசாசனம் செய்துள்ளார்.

18 மலைநாட்டு திருப்பதிகளில் ஒன்று. மூலவரை சந்திரனும், பரசுராமனும் வணங்கினர் என்பது ஐதீகம். பதினாறாம் நூற்றாண்டில் தோன்றிய ஸ்ரீகிருஷ்ண சைதன்யர் திருவட்டார் வருகைதந்து ஆதிகேசவனை வணங்கினார் என்றும் இக்கோவிலின் அமைதியான சூழ்நிலைதான் ஸ்ரீபிரம்மசம்ஹித்தை என்ற தத்துவ நூலை எழுதத்தூண்டியது. திருவட்டாறு தலபுராணம் ஆதி அனந்தபுரம் எனக்குறிப்பிடுவதால் திருவட்டார் ஆலயம் தான் காலத்தால் முந்தியது என தெரிய வருகிறது.

கல்வெட்டுகள்


இத்திருக்கோவிலில் 11-ம் நூற்றாண்டில் இருந்து 18-ம் நூற்றாண்டு வரையிலுள்ள கல்வெட்டுகள் பல காணப்படுகின்றன. பலிக்கல் மண்டபத்தில் கிடைத்த கல்வெட்டு ஒன்று சோழப்பேரரசன் முதல் இராஜேந்திரன் (கி.பி. 1013 - 1045) காலத்தில் தோன்றியதாகும். மூலவரை “திருவட்டாறு பள்ளி கொண்டருளுகின்ற பெருமாள்” என இக்கல்வெட்டு தெரிவிக்கின்றது.

கி.பி. 1174-ல் தோன்றிய ஒரு கல்வெட்;டு வேணாட்டு இளவரசன் வீரஉதயமார்த்தாண்ட வர்மா திருவடி இக்கோவிலுக்கு பல திருப்பணிகள் செய்வித்தான் என தெரிவிக்கின்றது. திருவிதாங்கூர் அரண்மனை நூலகத்தில் கிடைத்த ஓலைச்சுவடிகளில் திருவனந்தபுரம் பத்மநாபசுவாமியையும் திருவட்டாறு ஆதிகேசவ பெருமாளையும் பற்றி பத்துப்பாடல்கள் காணப்படுகிறது. கி.பி. பதிமூன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்த திருவிதாங்கூர் மன்னர் சர்வாங்கநாத ஆதித்தவர்மன் தான் இப்பாடல்களை எழுதினார் என்று அச்சுவடிகள் கூறுகின்றன.

கி.பி. 1604-ல் தோன்றிய இரு கல்வெட்டுகள் இக்கோவிலின் பல பகுதிகள் கட்டி முடிக்கப்பட்ட செய்தியை தெரிவிக்கின்றன. வீர ரவிவர்மன் கோவிலை சீரமைத்து ஒற்றைக்கல் மண்டபத்தையும் கட்டினான் என்று கல்வெட்டு தெரிவிக்கின்றது. வீரரவிவர்மன்  அரசனின் சகோதரன் ஆதித்தவர்மன் நான்கு பிரகாரங்களிலும் கற்களை பரப்பினான் என்றும், அவரது இளைய சகோதரன் ராமவர்மா இரண்டு துவாரபாலகர்களைப் பிரதிஷ்டை செய்தான் என கல்வெட்டுகள் தெரிவிக்கின்றது.

கி.பி. 1680-ம் ஆண்டு முகமதுகான் என்ற முகமதிய படைத்தலைவன் படையுடன் வந்து திருவட்டார் கோவிலை கொள்ளையிட வந்தான். வேணாட்டு படைகளுக்கும், முகம்மதிய படைகளுக்கும் கடுமையான போர் நடைபெற்று முகம்மதிய படை வெற்றி பெறும் தருவாயில் ஒரு கடந்தை கூட்டம் பறந்து வந்து முகம்மதிய படை தளபதியையும், அவனது குதிரையையும் தாக்கியது. குதிரை அவனை கீழே தள்ளி மிதித்தது. முகம்மதுகான் இறந்தான். அவனது கல்லறை திருவட்டாறில் உள்ளது. இதனால் அப்பகுதி கான்கரை என பெயர் பெற்றது. முகிலன் கல்லறை இன்று தனியார் வசம் உள்ளது.

கி.பி. 1741-ல் வேணாட்டு மன்னர் மார்த்தாண்ட வர்மா-வுக்கும், டச்சு படை வீரர்களுக்கும் குளச்சலிலே வைத்து பெரும் போர் நிகழ்ந்தது. போருக்கு புறப்படும் முன்பாக தன் உடைவாளை குலதெய்வமான திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் முன்னே வைத்து ஆசிப் பெற்று சென்றதாக கோவில் கணக்கேடு தெரிவிக்கின்றது. இந்நிகழ்ச்சி மாராட்டிய மன்னன் வீரசிவாஜி, பாவானி தேவியை வணங்கி பின்னரே போரிடச் செல்லும் வழக்கத்ததை நினைவூட்டி நிற்கும்.

இத்திருக்கோவிலில் உள்ள உற்சவ மூர்த்தியைப் பற்றி ஒருக்கதை உள்ளது. கி.பி. 1740-ம் ஆண்டு ஆற்காட்டு நாவப்பின் ஆட்கள் வந்து திருவட்டார் ஆலயத்தில் உள்ள உற்சவ மூர்திதியை எடுத்து சென்று நவாப்பிடம் கொடுத்தனர். பெருமானின் திருவுருவச்சிலை அவர்களின் கையில் இருந்து மேலே எழும்பி சென்று கொண்டு இருந்தது. ஊற்சவமூர்த்தியின் காலில் துளை ஏற்படுத்தி கட்டி போட்டனர். இதைத் தொடர்ந்து கடுமையான வயிற்றுவலியால் நவாப் துடித்தான். சிலரின் அறிவுரைப்படி உற்சவ மூர்த்தியை திருவட்டார் கோவிலுக்கு திருப்பி கொடுத்தார். வயிற்றுவலி மறைந்தது. தன் தவறை உணர்ந்து பெருமாளுக்கு காணிக்கையாக தங்கத்தட்டையும், கிரீடத்தையும் காணிக்கையாக கெடுத்து தம் செலவில் ஆண்டுத்தோறும் பூஜை நடத்தவும் ஏற்பாடு செய்தான். பங்குனி மாத திருவிழாவில் உற்சவமூர்த்தியை ஒரு மண்டபத்தில் வைத்து பூஜை செய்வர். இப்பூஜை திரு அல்லா பூஜை எனவும், இம்மண்டபம் திரு அல்லாமண்டபம் என அழைக்கப்படுகிறது.

திருவிழாக்கள்


வருடத்தில் இரண்டு திருவிழாக்கள் நடைபெறுகிறது. ஐப்பசி மாதம் திருக்கொடியேறி 10 நாட்கள் திருவிழா நடைபெறுகின்றது. திரு ஆறாட்டு திருவட்டார் தளியல் ஆற்றில் நடைபெறும். பங்குனி மாதம் திருக்கொடியேறி 10 நாட்கள் திருவிழா  திரு ஆறாட்டு மூவாற்றுமுகம் ஆற்றில் நடைபெறும். தை மாதம் 13 நாட்கள் களபபூஜை நடைபெறும். முடிவு நாளில் பெருந்தமிர்து பூஜை 108 உணவு வகைகள் படைத்து பூஜை நடைபெறும். வைகுண்டஏகாதசியும், ஓணவில் பூஜையும் சிறப்புடன் நடைபெறுகின்றது.

திருவதாங்கூர் சமஸ்தானத்தில் இத்திருக்கோவில் கட்டுப்பாடான பூஜைகளுடன் சிறந்து விளங்கியது. தமிழ் நாட்டுடன் இணைக்கப்பட்ட பிறகு  அக்கோவில் வீழ்ச்சி ஏற்பட்டது. 1981-ம் ஆண்டு ஹிந்து முன்னணி திருவிழாக்குழு திரு.இராம சுடலைமுத்துப் பிள்ளை அவர்களால் துவக்கப்பட்டு சுமார் 24 வருடங்கள் சனிக்கிழமை முழுகாப்பு வழிபாடு, சத்சங்கம், கூட்டுபிரார்த்தனை நடைப்பெற்று வந்தது.

21 வருடங்கள் மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசி விழாவும், மாணவர்களுக்கு கல்வி நிதி உதவி, திருமண நிதி உதவி அளிக்கப்பட்டது. 25-வருடம் 2006-ல் நிறைவு பெற்று வெள்ளி விழா மலர் வெளியிடப்பட்டது. கடந்த 20 வருடங்களாக கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திராவின் சார்பில் 2007 திருவிளக்கு பூஜை நடைபெற்று வருகிறது. திருக்கோவில்களில் அரசு அன்னதானத்திட்டம் துவங்கும் முன்பே 17.10.1998 முதல் ஸ்ரீ ஆதிகேசவப்பெருமாள் திருக்கோவிலில் மாதம் கடைசி சனிக்கிழமை அன்னதானம் துவங்கி நடைபெற்றது. பார்வதிபுரம் ஸ்ரீ சாரதா மடம் சுவாமி அம்பிகானந்தஜி மகராஜ் ஆலோசனைப்படி அன்னதானம் சிறப்பாக நடைப்பெற்றது. இத்திட்டம் சிறப்புடன் நடைபெற வேண்டி ஸ்ரீ அன்னபூரணி சேவா அறக்கட்டளை துவங்கப்பட்டது.

அறக்கட்டளை நிறுவனர் உயர் திரு. இராம சுடலைமுத்துப் பிள்ளை கடந்த 25.6.2013 அன்று தனது 86-வது வயதில் இறைவனடி சேர்ந்தார். அவரின் வழிக்காட்டலில் சேவை பணிகள் தொடரும். தமிழ்நாடு முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்களால் திருவட்டார் புரதான நகரம் என அறிவித்து ஒரு கோடி ரூபாய் வளர்ச்சிப்பணி செய்ய ஆணை வழங்கியுள்ளார். ஸ்ரீ அன்னபூரணி சேவா அறக்கட்டளை அவர்களை வாழ்த்துகிறது! நீடுழி வாழ ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் அருள்புரியட்டும்!

No comments:

Post a Comment